Wednesday, March 24, 2010

திரையரங்கில் பார்த்த 'எல்லாளன்' திரைப்படம்


2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி நான் காலையில் யாழ் இணையத்தில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் பார்த்தபின்பு, புதினம் இணையத்தளத்துக்கு சென்றேன். "அனுராதபுரம் வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்" என்ற தலைப்பினைப் பார்த்தேன். யாழில் இணைக்கலாமா என யோசித்தேன். மகிழ்ச்சியான செய்தியைக் கண்டு யாழில் இன்னும் ஒருவரும் இச்செய்தியை இணைக்கவில்லையே. தெரிந்தவர்களுடன் தொலைபேசியில் இச்செய்தியைச் சொன்னேன்.யாழில் யாழ்கள உறவு 'மின்னல்' இச்செய்தியை முதலில் இணைத்தார். நானும் ஊடகங்களில் தேடிப்பிடித்து செய்திகளை இணைத்தேன்.பல வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்திகளை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அன்று ஈழத்தமிழர்கள் பலர் இச்செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். வானூர்தித்தளத்தை தாக்கி அழித்து வீரமரணமடைந்த கறும்புலி வீரர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வந்தன. இவர்களை நினைத்து கவலைப்பட்டாலும் அன்று பெரும்பாலோர் அனுராதபுரம் வான்படைத்தளத்தாக்குதல் வெற்றியை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அனுராதபுரத்தில் நீதி நேறி தவறாது ஆட்சி செய்த கடைசித்தமிழரசன் 'எல்லாளன்' என்பவரின் பெயரை இத்தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் சூட்டினார்கள். எல்லாள மன்னனை வெற்றி கொள்ளமுடியாத துட்டகைமுனு என்ற சிங்கள அரசன் சூழ்ச்சியின் மூலம் எல்லாளனைத் தோற்கடித்தான் என்பது வரலாறு. அதே போல சேர சோழ பாண்டியன், சங்கிலியன், பண்டாரவன்னியனுக்குப் பிறகு உலகிலே கடைசியாக தமிழர் ஆட்சிசெய்த வன்னி நிலப்பரப்பை வெற்றி கொள்ள முடியாத சிங்களம் சூழ்ச்சி மூலம் தமிழர்களின் ஆட்சியைத் தோற்கடித்தது. பேச்சுவார்த்தை என்று நோர்வே இழுக்க,பயங்கரவாதிகள் என்று கனடா,ஐரோப்பிய நாடுகள் தடை செய்ய,தமிழுக்காக உதவி செய்த சகோதரர்களை அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா, அவுஸ்திரெலியா நாடுகள் கைது செய்ய, சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு போட்டியாக சோனியாவின் இந்தியா சிங்களத்துக்கு உதவி செய்ய, குரல் கொடுத்த தமிழகத்து சகோதரர்களின் எழுச்சியை தடுக்க அரசியல்வாதி கருணாநிதி கபட நாடகம் நடாத்தி முடிக்க, யுத்தத்தில் பாவிக்கமுடியாத தடை செய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகள், நச்சுவாயுக்கள் உதவியுடன் சிங்களம் தமிழரது ஆட்சியைத் தோற்கடித்தது.

சிட்னியில் 'எல்லாளன்' திரைப்படம் பேர்வூட் திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. பெரிதாக விளம்பரம் இல்லாவிட்டாலும் இப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக 4 முறை திரையிடப்பட்டது. நுளைவுச்சீட்டினைப் பெறமால் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்காக மேலும் 2 காட்சிகள் இங்கு திரையிடப்பட்டது.படம் காண்பிக்கமுன்பு, பார்வையாளர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அனுராதபுரம் தாக்குதலில் வீர மரணமடைந்த போராளிகளுக்கும், இத்திரைப்படத்தில் பங்கேற்று உயிரழந்த கலைஞர்களுக்கும், மண்ணுக்காக வீரமரணமடைந்த போராளிகளுக்கும், மக்களுக்கும் அஞ்சலி செலுத்தினோம்.

'எல்லாளன்' திரைப்படத்தில் நடித்தவர்கள் பலர் தற்பொழுது உயிரோடு இல்லை. படப்பிடிப்பு நடக்கும்போது ராணுவம் குண்டு வீசியதில் மேஜர் புகழ்மாறன், தவா, அகிலன், ரவி ஆகிய நால்வர் படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துபோனார்கள். நாட்கள் போகப் போக, நடித்தவர்களும் பணிபுரிந்தவர்களும் ஒவ்வொருவராக உயிரிழந்தாலும் படம் முழுமையான திட்டப்படி படப்பிடிப்பின நடாத்தி முடித்தார்கள். வன்னியில் சிறிலங்காப் படை குண்டுவீச்சினால் மக்கள் இறக்க (குறிப்பாக செஞ்சோலையில் வீசிய குண்டினால் 60க்கு மேற்பட்ட சகோதரிகள் இறக்க), கொலைகார விமானத்தை அழிக்க 21 கரும் புலிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளுக்கு கோழைகளாக என்னைப்போல ஒடிச்சென்ற பலருக்கு அனுராதபுரம் தாக்குதலின் வெற்றி தான் தெரியும். ஆம் அன்று மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் போராளிகளின் தியாகம் பலருக்கு தெரியாது. தாக்குதலை நடாத்துவதற்கு பல நாட்களாக கடினமான பயிற்சி, வேவுப்புலிகளின் வேவுபார்த்து தகவல் சேகரிப்பு, இக்கரும்புலிகளுக்கு இருக்கும் அன்பும் பாசமும் உள்ள குடும்பங்கள். இவர்களை நேசிக்கிற குடும்பத்தவர்களும், காதலிக்கிற காதலிகளும் இருக்க பிறந்த மண்ணுக்காக விலைமதிக்கமுடியாத உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.

எதுவித கற்பனையுமின்றி நடந்தவற்றை மீண்டும் இப்படத்தில் காணலாம். 2008ல் கொடிய யுத்தங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு காட்டில் இப்படத்துக்காக விமானத்தளம் செயற்கையாக அமைத்து படம் பிடித்திருக்கிறார்கள். தண்ணீறுற்று போன்ற கிராமங்களில் படம் எடுத்திருக்கிறார்கள். திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய இப்படம் முடியும் போது தமிழீழ அரசியல் துறை, நிதித்துறை.... என பலருக்கு நன்றிகள் காண்பிப்பார்கள். சிறுசு சிறுசாகக் கட்டிய கோட்டை முற்றாக தற்போது அழிந்து விட்டதே என்பதை நினைத்து எனது கண்ணில் வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயற்சித்து தோல்வியடைந்தேன். என்னைப் போல பலர் படம் முடிந்தும் திரையரங்கை விட்டு வெளியேறாமல் சில நிமிடங்கள் அங்கேயே இருந்தார்கள்.