Wednesday, September 19, 2012

சிட்னியில் நடைபெற்ற உங்களின் கதையைச் சொல்லுங்கள் (Tell Your Story)என்ற நிகழ்வு

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழர்களின் குரல்(Voice of Tamils) என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'உங்களின் கதையைச் சொல்லுங்கள்' (Tell Your Story) என்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன். பொதுவாக சிட்னியில் ஈழத்தமிழர்களினால் நடாத்தப்படும் நிகழ்ச்சி என்றால் தென்னிந்தியா தமிழ் திரைப்படப் பாடல்கள், வட இந்திய திரைப்படப்பாடல்களுக்கு கவர்ச்சியான உடைகள் அணிந்து ஆடும் குத்தாட்டங்கள், இதிகாச நாடகங்கள், இராமர்,காந்தி என்று தான் இருக்கும். ஈழத்தமிழர்களின் அவலங்கள் இருக்காது. சென்ற வருடமும் தமிழர்களின் குரல் அமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு நுளைவுச்சீட்டினை வாங்கியும், தவிர்க்கமுடியாத காரணங்களினால் நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை. அந்நிகழ்வுக்கு சென்ற நண்பன் ஒருவரை அந்நிகழ்வு பற்றி அபிப்பிராயம் கேட்டேன். ஈழத்தமிழர்களும், வேற்று நாட்டவர்களும் தங்களது நாட்டின் பிரச்சனைகளை நடன வடிவில் கொண்டுவந்தார்கள். பல வெளினாட்டவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள். நடுவர்களாக அவுஸ்திரெலியர்கள் கலந்து கொண்டார்கள். சேகரிக்கப்பட்ட பணம் உலகத்தமிழர் பேரவை உட்பட சில அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டதாக நண்பன் எனக்கு சொன்னார். இம்முறை, சென்றமாதம் 8ம்திகதி சிட்னியில் உள்ள சில்வர்வோட்டர் என்ற இடத்தில் இருக்கும் சி3 அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஈழத்தமிழர் ஒருவரும், மேற்கிந்தியா தீவுகளில் ஒன்றான ஐமேக்கா நாட்டினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும் தொகுத்து வழங்கினார்கள்.
முதலில் உலகில் இன விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த மாவீர்ர்களுக்கும், போரினால் இறந்த பொதுமக்களுக்கும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. மங்கள விளக்கேற்றலின்பின்பு கரிசன் இளங்கோவன் அவர்களின் புஸ்பாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
தமிழர்களின் குரல் அமைப்பின் தலைவர் இந்நிகழ்வு நடைபெறுவதன் நோக்கம் பற்றி சிறப்பாக உரையாற்றினார். பிரதம விருந்தினர் "இனத்தினால் வேறுபட்டாலும் நாங்கள் அனைவரும் அவுஸ்திரெலியர்கள். ஆனால் எமது மொழி அடையாளத்தினை மறக்கக்கூடாது" என்று உரையாற்றினார். இந்நிகழ்வில் ஈழம், பர்மா, தென்சூடான் போன்ற நாட்டவர்களின் கலாச்சாரம், அவலங்கள் நடனப் போட்டியாக நடைபெற்றது. பர்மா நாட்டினைச் சேர்ந்த ஒரு கிராமமக்கள் தாங்கள் வாழும் கிராமத்தில் உள்ள பெண்கள் தண்ணீர் பிரச்சனைக்காக பல தூரம் சென்று தண்ணீரை குடங்களில் பெற்று வருவதினை நடனத்தில் வெளிப்படுத்தினார்கள். தண்ணீர் எடுக்கப்போகும் போது ஏற்படும் பிரச்சனைகளை அழகாக 8, 9 வயது சிறுமிகள் நடனம் ஆடி வெளிப்படுத்தினார்கள். நடனமாடிய சிறுமி ஒருவர் இங்கு சிட்னியில் வீட்டிலேயே குழாயின் மூலமாக நீரினைப் பெறக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சியான விடயம் என்று சொன்னார்.
500 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் வயலில் இருந்தும் கடலில் மீன்பிடித்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்த இனம் தமிழினம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் வருகைக்குப் பிறகு தமிழினம் அடிமைப்பட்டு, தற்பொழுது சிங்கள இனத்தினால் அடிமைப்பட்டு இருக்கின்றது. சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களினால் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. தமிழர்களின் கல்வி மறுக்கப்பட்டது. இதனால் தமிழர்கள் போராட வெளிக்கிட்டார்கள். பல வெற்றிகளைப் பெற்றார்கள். ஆனால் உலக நாடுகளின் உதவியுடன் 2009ல் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரு சில நாட்களில் கொண்டு குவிக்கப்பட்டார்கள். இவற்றை ஈழத்து கலைஞர்கள் நடன நிகழ்வின் மூலம் வேற்று இன மக்களுக்கு வெளிக்கொண்டு வந்தார்கள்.
(வட) சூடான் நாட்டு அரசினால், தென் சூடான் நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை தென் சூடான் நடனக்கலைஞர்கள் நடனம் ஆடி, எங்களுக்கு அவர்களின் அவலங்களைச் சொன்னார்கள். தென்சூடான் மக்களின் எழுச்சி கீதம் நடன நிகழ்வில் பாடப்பெற்றது.அண்மையில் தென் சூடான் சுதந்திர நாடாக விடுதலை அடைந்திருக்கிறது. ஈழத்தமிழர்களைப் போல 30 வருட போராட்ட அனுபவங்களை தென் சூடான் மக்களும் அனுபவித்திருக்கிறார்கள்.
நடுவர்களின் தீர்ப்பின் மூலமும், பார்வையாளர்களின் வாக்களிப்பின் மூலமும் ஈழத்து நடனம் முதல் இடத்தினை பெற்றது. 3 அமைப்புக்கும் பரிசுப்பணம் கிடைத்தது. பர்மா, தென் சூடான் கலைஞர்களுக்கு கிடைத்த 1000 வெள்ளிகளை தங்களது தாயக மக்களுக்கு உதவுவதற்காக செலவளிக்கப்போவதாகச் சொன்னார்கள். ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த நடுவர் ஒருவர், ஸ்கொட்லாந்தின் விடுதலை பற்றியும் சொன்னார். ஈழத்துக்கலைஞர்களோடு, இந்தோனேசியா ,கானா போன்ற வேற்று நாட்டவர்களின் சிறப்பு நடனங்களும் நடைபெற்றது.
எங்களின் திறமைகளை கொண்டு எங்களின் அவலங்களை உலகுக்கு தொடர்ந்து சொல்லிவரும் தமிழர்களின் குரல் அமைப்பின் முயற்சியிக்கு தலை வணங்குகிறேன். இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட பணத்தினையும், போட்டியில் வெற்றி பெற்றதினால் கிடைக்கப்பட்ட பணத்தினையும் உலகத்தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா மருத்துவ நிதியம் போன்ற அமைப்புக்களுக்கு தமிழர்களின் குரல் அமைப்பினால் பகிர்ந்து வழங்கப்பட்டது.

Wednesday, February 22, 2012

சிட்னியில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் எனது அனுபவங்கள்

சென்ற வெள்ளிக்கிழமை சிட்னியில் அவுஸ்திரெலியா சிறிலங்கா அணிக்கு இடையிலே துடுப்பாட்டப் போட்டி ஒன்று நடைபெற்றது. 'தமிழர்களின் குரல்' என்ற இளையோரின் அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தரும்படி கேட்டிருந்தது. இந்த அமைப்பில் பெரும்பாலும் அவுஸ்திரெலியாவில் பிறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களே அதிகமாக இருந்தார்கள். துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கான நுளைவுச்சீட்டு, 'WHOSE SIDE ARE YOU ON?' என்ற வசனம் எழுதப்பட்ட மேலாடை, 'Go Aussi Go' என்று எழுதப்பட்ட கொடி போன்றவற்றை தமிழர்களின் குரல் அமைப்பின் மூலம் பெற்றுக் கொண்டு வேலையில் அரை நாள் விடுமுறை கேட்டுக் கொண்டு துடுப்பாட்டம் பார்க்க சென்றேன்.


என்னுடன் வேலை செய்யும் பெரும்பாலான அவுஸ்திரெலியர்களுக்கு நான் அவுஸ்திரெவுக்கு ஆதரவு என்பது தெரியும் என்பதினால் 'Aussie Aussie Aussie oy oy oy' என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்கள். நான் கொடியுடன் செல்வதைக் கண்ட ஒருவர்( இந்தியர் என நான் அவரை அப் பொழுது நினைத்தேன்) என்னைப் பார்த்து பிழையான கொடியுடன் செல்கிறீர் என்றார். அச்சமயத்தில் எனக்குத் தெரிந்த அயர்லாந்து நாட்டுப் பெண் ஏன் கொடியுடன் செல்கிறீர்கள் என்று கேட்க நான் துடுப்பாட்டம் பார்க்கப் போவதாக சொன்னேன். பிழையான கொடியுடன் நான் செல்வதாக சொன்னவரும் தானும் துடுப்பாட்டம் பார்க்க அன்று செல்லவுள்ளதாக சொன்னார். அப்பொழுது தான் நான் அவர் சிங்களவர் என அறிந்து கொண்டேன். நான் பிறந்த நாட்டில் கிடைக்காத சுதந்திரத்தினை தந்த அவுஸ்திரெலியா நாட்டுக்கே எனது ஆதரவு என்று சொல்லிவிட்டு சென்றேன். நான் கொடியுடன் வருவதைப் பார்த்த வீதிகளில் சென்ற அவுஸ்திரெலியரும் என்னைப் பார்த்து 'Aussie Aussie Aussie oy oy oy' என்று கத்தி ஆதரவு தந்தார்கள்.

சிட்னி மத்திய புகையிரத நிலையத்தில் இறங்கி துடுப்பாட்ட மைதானம் நடைபெறும் இடத்துக்கு செல்ல விசேட பேருந்துக்கள் செல்லும் இடத்தினை நோக்கி சென்றேன். வழியில் அதிகளவு சிங்களவர்கள் தங்களது நாட்டு தேசியக் கொடியுடன் செல்வதைக் கண்டேன். அவுஸ்திரெலியா தேசியக் கொடியுடன் அங்கு நின்ற சில அவுஸ்திரெலியர்கள் என்னைப் பார்த்து எந்த நாட்டுக்கு ஆதரவு என்று கேட்டார்கள். நான் அவுஸ்திரெலியா நாட்டுக்கு என்று சொல்லி எனது கொடியினை உயர்த்திக் காட்டினேன். அதில் ஒரு அவுஸ்திரெலியர் மற்ற அவுஸ்திரெலியரிடம் 'இவர் இந்தியன் போல இருக்கு. அதுதான் சிறிலங்காவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை' என்றார். நான் உடனே 'நான் பிறந்த இடம் சிறிலங்கா. ஆனால் அது ஒரு இனவாத நாடு. நான் ஒரு தமிழன். இங்கு அவுஸ்திரெலியாவில் தான் எனக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்தது. இதனால் நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருகிறேன்' என்றேன். அவர்கள் உடனே 'Aussie Aussie Aussie oy oy oy' என்று பாடினார்கள்.

பேருந்தில் ஏறும் போது எனக்கு தெரிந்த பாடசாலை மாணவர் உட்பட மூன்று தமிழர்கள் அங்கு வந்தார்கள். அவர்களிடம் தமிழர்களின் குரல் அமைப்பிடமா நுளைவு சீட்டினை வாங்கினீர்கள் என்று கேட்க, இல்லை நாங்கள் விடுமுறைக்கு சிறிலங்காவுக்கு போகிறோம். அதனால் உங்களுக்கு பக்கத்தில் இருக்க மாட்டோம். அதற்கு நான் ' அவுஸ்திரெலியா துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு குடுத்தால் என்ன பயங்கரவாதமா? ' என்று கேட்டு விட்டு பேருந்தில் ஏறினேன் பேருந்துப் பயண முடிவில் பேருந்தில் இருந்து இறங்கி மைதானத்தினை நோக்கி சென்றேன். பல தமிழர்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியுடன் சிறிலங்காவுக்கு ஆதரவான உடையுடன் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் என்னை ஒரு வித்தியசமாகப் பார்த்தார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் அவுஸ்திரெலியாவிற்கே ஆதரவு என்று சொன்ன நியூகாசில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சிறிலங்கா தேசியக் கொடியுடன் அங்கு வந்தார். என்னைக் கண்டதும் தான் விளையாட்டினை இரசிப்பவன். அரசியலை இங்கு இழுக்கவேண்டாம் என்றார். முன்பதிவு செய்யப்பட்ட எனது இருக்கைக்கு சென்ற போது அங்கே அவுஸ்திரெலியாவுக்கு அதரவு தெரிவித்துக் கொண்டு தமிழர்கள் இருந்தார்கள்.

போட்டி தொடங்கியதும் நாங்கள் அவுஸ்திரெலியா துடுப்பாட்டக் காரர்கள் பந்தினை நன்றாக அடிக்கும் போது எழுந்து நின்று கொடியினை ஆட்டி அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.அப்பொழுது மைதானத்தில் உள்ள திரையில் நாங்கள் அடிக்கடி வந்தோம். நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியில் எங்களைக் காட்டினார்கள்.
ஆனால் எங்களுக்கு பின்னால் பல சிங்களவர்களும் இருந்தார்கள். அவர்கள் இசைக் கருவியினை மீட்டி இசைக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களில் சிலர் இசைக்கருவிகளை கொண்டு வரும் போது மைதானத்தின் வாசலில் இருந்த காவலர்கள் அந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. கேட்டதற்கு முன்பதிவு செய்திருக்கவேண்டும் என்றார்கள். பல முயற்சிகள் செய்தும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. முன்பு சிட்னியிலும் கன்பராவிலும் நடைபெற்ற போட்டியில் முன்பதிவு செய்யாமலே இசைக்கருவிகளை மைதானத்துக்கு கொண்டுவர தமிழர்களுக்கு அனுமதி தந்திருந்தார்கள். சிங்களவர்களின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்கத் தொடங்க திரையில் அவுஸ்திரெலியாக் கொடியும் சிங்களக் கொடியும் அருகருகே இருப்பது போலத் தெரிந்ததினால் நாங்கள் ஆட்கள் இல்லாத இடத்துக்கு சென்று அமர்ந்து அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தெரிவித்தோம். சிங்கள தேசத்துக்கு அதிகளவான ஆதரவாளார்கள் ஆடிக் கொண்டிருந்ததினாலும், சிங்கள தேசத்து துடுப்பாட்ட அணி அன்று நன்றாக விளையாடியதினாலும் சிங்களவர்களை அதிக நேரம் பிறகு திரையில் காண்பித்தார்கள்.

தமிழர்களின் குரல் அமைப்பு கிட்டத்தட்ட 120 பேருக்கு நுளைவு சீட்டினை விற்றிருந்தது. ஆனால் அங்கே கிட்டத்தட்ட 50, 60 தமிழர்கள் தான் எங்களுடன் இருந்து அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தந்தார்கள். சில தமிழர்கள் தனியாக இருந்து துடுப்பாட்டம் பார்த்தார்கள். சிலர் குடிப்பதிலேயே நேரத்தினைப் போக்கினார்கள். சிலர் தமிழர்களின் குரல் மூலம் நுளைவுச்சீட்டினை வாங்கி சிங்களத்து ஆடை அணிந்து வந்து சிங்களவனோடு ஆடிக் கொண்டிருந்தார்கள். இதைவிட நூற்றுக்கணக்கான தமிழர்கள் தாங்களாகவே நுளைவு சீட்டினை வாங்கிக் கொண்டு வந்து சிங்கள தேசத்துக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியான தமிழர்களில் ஒருவர் எங்களைப் பார்த்து நடுவிரல் காட்டினார். சிங்கள ஆதரவு தெரிவித்த இன்னுமொரு பெண் தமிழர் 'விளையாட்டில் அரசியல் பார்க்கக்கூடாது. சிறிலங்கா பிடிக்காவிட்டால் வேறு எங்கேயும் போய் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். இங்கேயேன் வந்தீர்கள்' என்றார். எங்களுடன் இருந்த தமிழர் ஒருவர் அந்தப் பெண்ணைப் பார்த்து 'உனது அப்பாவின் பெயர் பண்டாராவா?' என்று கேட்டார். மாவீரர் குடும்பத்து இளைஞன் ஒருவரும் சிங்கள தேசத்து ஆதரவு உடையுடன் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார். சிறிலங்காவுக்கு விடுமுறை போகப் போகிறோம் என்று பேருந்து தரிப்பிடத்தில் சொன்ன மாணவர்களும் சிங்கள தேசத்து ஆதரவு உடையுடன் நின்றார்கள். அங்கே எங்களைக் கண்டதும் ஒடப்பார்த்தார்கள். எங்களுடன் இருந்த தமிழர் ஓருவர் அவர்களுக்கு அவுஸ்திரெலியா ஆதரவு உடையினை அணிவித்தார். கன்பராவில் இருந்து 300 கிலோ மீற்றர் பயணம் செய்து வந்த ஒரு தமிழ் குடும்பம் எங்களுடன் இருந்து அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

சிங்கள தேசத்து பொருட்களை விற்பனை செய்யும் தமிழ்க் கடைக்காரர் எங்களைப் பார்த்து' இவைக்கு வெள்ளைக்காரர்கள் என்று நினைப்பு. இவை என்ன கொடி பிடிச்சாலும் இவை கறுப்பர்கள் தான் . மூளை சலைவை செய்யப்பட்ட கூட்டங்கள் இவை' என்று இன்னுமொரு தமிழருக்கு சொன்னார். சிங்கள அணி அவுஸ்திரெலியாவுக்கு துடுப்பாட்டம் வரும் போது அவர் தனது கடையில் சிங்கள அணிக்கு ஆதரவான ஆடைகளை விற்பவர். அவுஸ்திரெலியாவிற்கு ஆதரவு தரும் எங்களுக்கு சில வெள்ளைக்காரர்கள் ஆதரவு தந்தார்கள்.
போட்டியின் இடையே சிங்கள தேசத்துக்கு ஆதரவு தரும் கூட்டத்தில் இருந்து தமிழீழ தேசியக் கொடியுடன் ஒரு தமிழர் ஒருவர் தோன்றினார். இது பற்றி ஊடகங்களில் படித்திருப்பீர்கள்.

மைதானத்திலும், வீடு செல்லும் போது புகையிரத வண்டியிலும் பல வெள்ளைக்காரர்கள் ஏன் நீங்கள் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தந்தீர்கள் என்று கேட்க சிங்கள தேசத்தின் தமிழர்கள் மீதான இன அழிப்பினை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு முன்பாக ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகக் காட்டியும், துடுப்பாட்டத்தின் போது சிங்களத்துக்கு கொடி பிடித்த தமிழர்கள் என்னிடம் அவுஸ்திரெலியாவுக்கு கொடி பிடித்து என்னத்தினை சாதித்தீர்கள், அவுஸ்திரெலியா படுதோல்வி அடைந்திருக்கிறது என்றார்கள். அவுஸ்திரெலியா வென்றாலும் தோற்றாலும் நான் தமிழ் அவுஸ்திரெலியன். நான் சிறிலங்கன் அல்ல. கொடி பிடிக்கப் போய் சில வெள்ளைக்காரர்களுக்கு எங்களது அவலங்களை சொல்ல முடிந்ததே என்ற திருப்தி எனக்கு கிடைத்தது. இந்த திருப்தியை எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது.

மைதானத்தில் சிட்னி துடுப்பாட்ட உறுப்பினர்கள் அமர்ந்து துடுப்பாட்டத்தினைப் பார்வையிட தனியிடம் இருக்கின்றது. விண்ணப்பித்து 15, 20 வருடங்களின் பின்பு தான் உறுப்பினராக முடியும். அந்த உறுப்பினர்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு நாங்கள் செல்ல முடியாது. ஆனால் யாராவது தெரிந்த உறுப்பினர் இருந்தால் அவருடன் நாங்கள் செல்லலாம். சிறிலங்கா தூதுவராலயத்தினை சேர்ந்தவர்களுக்கு விசேட அனுமதி அங்கே இருக்கிறது. அங்கே போர்க்குற்றவாளியும் முன்னாள் கடற்படை தளபதியுமான அவுஸ்திரெலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் திசாரா சமரசிங்க உட்பட சில தூதுவராலயத்தினை சேர்ந்தவர்களும் இருந்தினை வீடு வந்து சேர்ந்தபின்பு தான் அறிந்தோம். தமிழ்க் கவுன்சிலர் ஒருவரும் அங்கே இருந்து சிங்களத்தில் தூதுவராலய அதிகாரி ஒருவருடன் சிங்களத்தில் கதைத்துக் கொண்டு துடுப்பாட்டத்தினை இரசித்துக் கொண்டிருந்தாகவும் அறிந்தோம். யார் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுத்தாலும் நான் தொடர்ந்து அவுஸ்திரெலியாவிற்கே ஆதரவு கொடுப்பேன். எனென்றால் நான் சிறிலங்கனல்ல. நான் தமிழ் அவுஸ்திரெலியன்.

Thursday, January 26, 2012

சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர்.

பகல் பதினொரு மணியளவில் மணமகன் குதிரை வண்டியில் ஏரிக்கரை ஒரத்தில் இருக்கும் பூங்காவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மணத்தோழனுடன் வந்து இறங்கினார். மூன்று தலைமுறைக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் திருமண நிகழ்வுக்கு குதிரை வண்டியில் தங்களது பரம்பரையில் மணமகன்கள் வருவது வழக்கம், அதே போல மணமகன் வர வேண்டும் என மணமகனின் பாட்டியார் விரும்பியதினால் மணமகன் குதிரை வண்டியில் வந்தார். நாதசுரம், மேளவாத்தியங்கள் வாசிக்கப்பட மணமகன் மேடைக்கு வந்து அமர்ந்தார். மேடைக்கு அருகில் இருக்கும் ஒலிவாங்கியில் திருமண நிகழ்வு பற்றி, அதை முன்னெடுத்துச் சென்றவர் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தார். வழமையாகத் திருமண நிகழ்வுகளில் காணப்படும் தேவையற்ற சடங்குகள் இத்திருமண நிகழ்வில் இல்லை. ஆனால் சம்பிரதாயங்கள் பேணப்படும் என்று சொன்னார். மேடையில் ஐயர் ஒருவரையும் காணவில்லை. இதனால் வழமையான திருமண நிகழ்வுகளில் ஐயர்மார்களினால் சொல்லப்படும் பொருள் விளங்காத வட மொழி இங்கு உச்சரிக்கப்படவில்லை.

மணமகனின் தகப்பனார் தேங்காய் உடை த்ததும், மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை கட்டும் நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக ஈழத்தில் பிறந்த பலர் சிட்னியில் தங்களது திருமணத்தின் போது வட இந்திய உடைகளை அணிவது வழக்கம். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன் வேட்டி அணிந்திருந்தார். சால்வையினைக் கொண்டு மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை இங்கு அணிவிக்கப்பட்டது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வரும் உதயன் பத்திரிகையில் மாப்பிள்ளைகளின் சீதனப் பட்டியலின் விபரங்கள் வெளியாகி இருந்தன. பெரும்பாலான ஆண்கள் தன்னைப் பற்றி நினைப்பதில்லை. ஆனால் தனக்கு வருபவர் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும். அத்துடன் முக்கியமாக கொழுத்த சீதனம் தரப்பட வேண்டும். சிங்கள அரசு, தமிழர் தயாகத்தினை முற்று முழுதாக கைப்பற்றிய பின்பு தாயக விடுதலைக்காக அர்ப்பணித்த பெண்கள் பலரினை சமுகம் ஒதுக்கி வைத்திருப்பதாக ஊடகங்களில் சில செய்திகள் வந்தன. சிலரை அவர்களின் குடும்பங்களே கண்டு கொள்வதில்லை எனவும் செய்திகள் வந்தன. ஆனால் வன்னியில் இருந்து பெண் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து சிட்னிக்கு அழைத்து, மணமகளாகக் கைபிடிக்க முனைந்தார் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன். மணமகனுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதும், வெவ்வேறு வயதுடைய 28 தோழிகளுடன் மணமகள் மேடைக்கு வந்தார்.

மே 19 2009க்கு முன்பு விடுதலைப்புலிகளை உயர்வாகப் பேசியவர்களில் சிலர் இப்பொழுது விடுதலைப்புலிகளைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். அவர்களின் தியாகங்களை கொச்சைப் படுத்துகிறார்கள். முன்பு ஊடகங்களில், மேடைகளில் , பொதுவிடங்களில் புலிகளை உயர்வாகச் சொன்ன இவர்கள் மே 2009க்குப் பிறகு வந்த மாவீரர் தினங்களில் கலந்து கொள்வதில்லை. மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பார்ப்பதில்லை. மணமகள் மேடைக்கு வந்ததும் மாவீரர்களை நினைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.

திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர், தாலி பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தார். அன்பின் சின்னமாக, அடையாளமாக அணிவிக்கப்படுவது தாலி. இது வேலி என்ற கருத்து தேவையற்றது. வேலி, எம் மனதில் போடவேண்டியது, கழுத்தில் அணியப்படுவதல்ல என்று அவர் கூறியதுடன் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தோர் தாலியை வாழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. அதே வேளை ஓதுவார் ஒருவரால் பஞ்ச புராணம் ஓதப்பட்டது. தொடர்ந்து மணமகன் அளிப்பும் மணமகள் அளிப்பும் இடம்பெற்றன. திருமணம் பற்றி தேசியத்தலைவர் சொன்ன "ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புகளைப் பகிர்ந்து, சமுகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு வாழ வேண்டும்" என்ற கூற்றினை திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர் சொன்னார். முள்ளிவாய்க்கால் அவலம் வரை தாயகத்தில் அங்குள்ள மக்களுக்கு உதவிய தமிழர் ஒருவர் தேங்காய் உடைக்க, மறைந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் ஆசீர்வதிக்கப்பட்ட தாலித்தட்டை ஏந்தி நிற்க, அவர் முன்னிலையில், தாயகத்துக்கு அதிகளவு உதவி செய்யும் தம்பதியினர் தாலியினை எடுத்து மணமகனுக்கு வழங்க, வீரச்சாவடைந்த மாவீரர்களையும், அரச படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூரப்பட்டவேளையில் மணமகனால் மணமகளுக்கு தாலி கட்டப்பட்டது.

திருமண நிகழ்வில் "பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே " ,"தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என் தேசமெங்கும் குண்டு வந்து வீழும் கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்" போன்ற தாயக விடுதலை கீதங்களை அழகாக நாதசுர இசையில் காதுக்கு இனிமையூட்டினார் நாதசுரக் கலைஞர். மக்கள் பெற வேண்டிய பேறுகள் பதினாறு. காளமேகப்புலவர் இப்பதினாறு பேற்றையும் இறைவனிடம் வேண்டிப்பாடிய பாடலை கூறி அழகாக அந்த பதினாறு பேறுகளும் எவை என விளக்கம் தந்தார், திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர். அவையாவன புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கள், துணிவு, செல்வம், உணவுத்தானியம், நல்லூழ், இன்பம், அறிவு, அழகு, பெருமை, அறம், நோயின்மை, நீண்ட ஆயுள்.

மணமகன் மணமகளுக்கு குங்குமப் பொட்டிட, மணமக்கள் மாலை மாற்ற, பெற்றோர், பெரியோர், வந்திருப்போர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்த சுவையான மதிய போசனத்துடன் திருமண நிகழ்வு ஒன்று முப்பது மணியளவில் முடிவுற்றது. வன்னியில் எத்தனையோ பெண்கள் திருமணவயது வந்தும் மாப்பிள்ளைகள் கிடைக்காமல் வாழ்கிறார்கள். இந்த மணமகன் முன்னெடுத்துச் செய்தது போல, புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் பல இளைஞர்கள், மணம் செய்ய எண்ணும் போது, வன்னிவாழ் பெண்களை வாழ்க்கைத் துணையாக்க முன்வருவார்களா?.