Monday, November 29, 2010

ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.


இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் சிறிலங்கா இராணுவத்தினால் எரியூட்டப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு அகதியாகச் சென்று அங்கு தமிழ் தகவல் மையத்தில் வேலை செய்தார். தமிழ் நேசன் என்ற பத்திரிகையை தமிழகத்தில் நடாத்தினார். அப்பத்திரிகையில் தமிழர்களின் போராட்டங்களை எழுதினார். இதனால் இந்திய அரசு இவரை தடாச் சட்டத்தில் சிறையில் அடைத்தது. சிறையில் நோய்வாய்ப்பட்டு இருந்த சிவ நாயகம் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை கிடைக்க இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் நோய் அதிகரிக்க, நிபந்தனையின் படி இவருக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைக்க பிரான்சு நாட்டில் அடைக்களம் பெற்றார். புலம் பெயர்ந்தாலும் கொடிய நோய்க்கு மத்தியிலும் 'Hot Spring' என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதில் தமிழர்களின் போராட்டத்தினைப்பற்றி எழுதினார். 2005ல் கொழும்பில் நோய் முற்றிய நிலையிலும் எழுதிய புத்தகம் தான் 'Sri Lanka: Witness To History' .இவர் முன்பு எழுதிய மற்றொரு புத்தகம் - 'Pen And Gun'. சுப்பிரமண்யம் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.

Monday, November 8, 2010

சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம்


சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான இரண்டாவது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் குரல் என்ற அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டது. நானும் கலந்து கொள்ள வேலையில் விடுமுறை கேட்டேன். சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவா செல்கிறீர்கள் என்று என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியர்கள் சிலர் கேட்டார்கள். இல்லை நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கவே செல்கிறேன். சிறிலங்காவில் பிறந்து ஏன் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்தேன். தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை எனக்குத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகவும் எங்களை அழிக்க நினைக்கும் சிறிலங்காவுக்கு எதிராகவும் குரல் கொடுக்க நான் கலந்து கொள்கிறேன் என்று சொன்னேன். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுப்பதினால் தங்களுக்கும் மகிழ்ச்சி. நன்றிகள் என்று என்னுடன் வேலை பார்க்கும் அவுஸ்திரெலியர்கள் சொன்னார்கள்.
நானும் வெள்ளிக்கிழமை துடுப்பாட்டம் பார்க்கத் தயாரானேன். எதிர்ப்பாராத விதமாக உறவினர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதினால் அவரைப் பார்க்கவேண்டி இருந்தது. இதனால் நான் பகலில் துடுப்பாட்டம் பார்க்கச் செல்ல முடியவில்லை. பல இளையோர் துடுப்பாட்டம் பார்க்க சென்றார்கள். சிங்கள அரசு தமிழர்களை சர்வதேச விதிமுறைகளை மீறிக் கொல்லுவதைக் காண்பிக்கும் குண்டு ஒன்றினை வீசும் பந்து வீச்சாளரின் படம் உடைய படத்தை உடைய மேலாடைகளை அணிந்தவண்ணம் சென்றார்கள்.


ஆனால் காவல்துறையினர் இந்த ஆடையினை அணிந்து உள்ளே செல்லக்கூடாது. உள்ளே யாராவது அணிந்து இருந்தால் அவர்களுக்கு 5000 வெள்ளி அபாராதம் கட்டவேண்டும் என்றும் சொன்னார்கள். இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மெல்பேர்ணிலும் சிறிலங்கா துடுப்பாட்ட அணிவரும் பொழுது சிறிலங்காவின் மனித உரிமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அவ்வார்ப்பாட்டங்கள் மைதானங்களுக்கு வெளியேதான் நடைபெற்றன. மைதானத்துக்கு உள்ளே நடைபெறவில்லை. சிட்னி துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கு மைதானத்தைச் சுற்றிவர பல வாசல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தால் எல்லாப்பார்வையாளர்களும் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்க மாட்டார்கள். மைதானத்துக்கு வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொலைக்காட்சியிலும் காண்பிக்கமாட்டார்கள்.
நான் சென்ற போது நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. போட்டி இடை நிறுத்தப்பட்டு இருந்தது. பல பார்வையாளர்கள் இனிமேல் போட்டி நடைபெற மாட்டாது என நினைத்து மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்திவிட்டேன். போய்ப்பார்ப்போம் என்று நினைத்து மைதானத்துக்குள் சென்றேன். சில நிமிடங்களின் பின்பு மழை விட்டதும் மீண்டும் போட்டி ஆரம்பமானது. அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவாக தமிழர்கள் கொடிகாட்ட அருகில் சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் சிங்களதேசத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். வாத்தியக்கருவிகளுடன் சில தமிழர்கள் இசை பொழிய, அவுஸ்திரெலியாத் துடுப்பாட்டக்காரர்கள் 4, 6 ஓட்டங்கள் பெறும் போது தமிழர்கள் எழுந்து ஆடினார்கள்.

இளையோர் ஒருவரைப் பார்த்து அவுஸ்திரெலியர் ஒருவர், நீங்கள் அவுஸ்திரெலியாவில் பிறந்தீரா என்று கேட்டார். ஆம் என்று அந்த இளைஞன் பதில் அளிக்க, வெள்ளைக்காரர் தமிழ் புலியா என்று சிரித்துக் கொண்டு கேட்க, இளைஞரும் ஆமாம் நான் தமிழ் புலி என்றார். வெள்ளைக்காரரும் அவ்விளைஞருக்கு கை கொடுத்தார். என்னைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், இசை வாத்தியங்களுடன் ஆடிப்பாடி தமிழர்கள் ஆடி அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்ததினால் பல தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். இங்கு திறமைக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரம் என்றால் என்ன என்பதை இங்கு தான் காண்கிறேன். இதனால் நாங்கள் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். அதற்கு வெள்ளைக்காரர் " உண்மையில் சுதந்திரமாக வாழக்கூடிய நாடுகளில் அவுஸ்திரெலியாவும் ஒன்று" என்றார். இடையில் இரு சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் வந்து எங்களைக் குழப்ப வந்தார்கள். காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டார்கள். ஒரு வெள்ளைக்காரர்கள் எங்களை அடிக்கடி புகைப்படம் எடுத்தார். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சி என்றார். மீண்டும் மழை அதிகம் குறுக்கிட போட்டி இடை நிறுத்தப்பட்டது. அவுஸ்திரெலியாவின் வெற்றிவாய்ப்பு குறைந்ததினால் அங்கிருந்து வீடு நோக்கிச் சென்றோம்.

இந்தப் போட்டியினைப் பார்க்க பல தமிழர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுடன் சேராமல் சிங்கள அணிக்கு ஆதரவு தந்தார்கள். சிலர் சிங்களத் தேசியக் கொடியினையும் வைத்திருந்தார்கள். இவர்களில் சிலர் சிங்கள இனவெறியைக் காட்டி அவுஸ்திரெலியாவில் அடைக்கலம் பெற்றவர்கள். அவுஸ்திரெலியாவில் எல்லாச் சலுகைகளும் பெற்றுக் கொண்டு சிங்கள நாடு நல்லது என்று சொல்பவர்கள். ஒரு சிலர் தமிழீழம் வேண்டும் என்று முன்பு கத்தியவர்கள். துடுப்பாட்டத்தில் சிங்களத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள். எனினும் எனக்குச் சுதந்திர வாழ்க்கையினைத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன் என்ற திருப்தியுடன் வீடு நோக்கிச் சென்றேன்.