Wednesday, February 22, 2012

சிட்னியில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் எனது அனுபவங்கள்

சென்ற வெள்ளிக்கிழமை சிட்னியில் அவுஸ்திரெலியா சிறிலங்கா அணிக்கு இடையிலே துடுப்பாட்டப் போட்டி ஒன்று நடைபெற்றது. 'தமிழர்களின் குரல்' என்ற இளையோரின் அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தரும்படி கேட்டிருந்தது. இந்த அமைப்பில் பெரும்பாலும் அவுஸ்திரெலியாவில் பிறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களே அதிகமாக இருந்தார்கள். துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கான நுளைவுச்சீட்டு, 'WHOSE SIDE ARE YOU ON?' என்ற வசனம் எழுதப்பட்ட மேலாடை, 'Go Aussi Go' என்று எழுதப்பட்ட கொடி போன்றவற்றை தமிழர்களின் குரல் அமைப்பின் மூலம் பெற்றுக் கொண்டு வேலையில் அரை நாள் விடுமுறை கேட்டுக் கொண்டு துடுப்பாட்டம் பார்க்க சென்றேன்.


என்னுடன் வேலை செய்யும் பெரும்பாலான அவுஸ்திரெலியர்களுக்கு நான் அவுஸ்திரெவுக்கு ஆதரவு என்பது தெரியும் என்பதினால் 'Aussie Aussie Aussie oy oy oy' என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்கள். நான் கொடியுடன் செல்வதைக் கண்ட ஒருவர்( இந்தியர் என நான் அவரை அப் பொழுது நினைத்தேன்) என்னைப் பார்த்து பிழையான கொடியுடன் செல்கிறீர் என்றார். அச்சமயத்தில் எனக்குத் தெரிந்த அயர்லாந்து நாட்டுப் பெண் ஏன் கொடியுடன் செல்கிறீர்கள் என்று கேட்க நான் துடுப்பாட்டம் பார்க்கப் போவதாக சொன்னேன். பிழையான கொடியுடன் நான் செல்வதாக சொன்னவரும் தானும் துடுப்பாட்டம் பார்க்க அன்று செல்லவுள்ளதாக சொன்னார். அப்பொழுது தான் நான் அவர் சிங்களவர் என அறிந்து கொண்டேன். நான் பிறந்த நாட்டில் கிடைக்காத சுதந்திரத்தினை தந்த அவுஸ்திரெலியா நாட்டுக்கே எனது ஆதரவு என்று சொல்லிவிட்டு சென்றேன். நான் கொடியுடன் வருவதைப் பார்த்த வீதிகளில் சென்ற அவுஸ்திரெலியரும் என்னைப் பார்த்து 'Aussie Aussie Aussie oy oy oy' என்று கத்தி ஆதரவு தந்தார்கள்.

சிட்னி மத்திய புகையிரத நிலையத்தில் இறங்கி துடுப்பாட்ட மைதானம் நடைபெறும் இடத்துக்கு செல்ல விசேட பேருந்துக்கள் செல்லும் இடத்தினை நோக்கி சென்றேன். வழியில் அதிகளவு சிங்களவர்கள் தங்களது நாட்டு தேசியக் கொடியுடன் செல்வதைக் கண்டேன். அவுஸ்திரெலியா தேசியக் கொடியுடன் அங்கு நின்ற சில அவுஸ்திரெலியர்கள் என்னைப் பார்த்து எந்த நாட்டுக்கு ஆதரவு என்று கேட்டார்கள். நான் அவுஸ்திரெலியா நாட்டுக்கு என்று சொல்லி எனது கொடியினை உயர்த்திக் காட்டினேன். அதில் ஒரு அவுஸ்திரெலியர் மற்ற அவுஸ்திரெலியரிடம் 'இவர் இந்தியன் போல இருக்கு. அதுதான் சிறிலங்காவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை' என்றார். நான் உடனே 'நான் பிறந்த இடம் சிறிலங்கா. ஆனால் அது ஒரு இனவாத நாடு. நான் ஒரு தமிழன். இங்கு அவுஸ்திரெலியாவில் தான் எனக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்தது. இதனால் நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருகிறேன்' என்றேன். அவர்கள் உடனே 'Aussie Aussie Aussie oy oy oy' என்று பாடினார்கள்.

பேருந்தில் ஏறும் போது எனக்கு தெரிந்த பாடசாலை மாணவர் உட்பட மூன்று தமிழர்கள் அங்கு வந்தார்கள். அவர்களிடம் தமிழர்களின் குரல் அமைப்பிடமா நுளைவு சீட்டினை வாங்கினீர்கள் என்று கேட்க, இல்லை நாங்கள் விடுமுறைக்கு சிறிலங்காவுக்கு போகிறோம். அதனால் உங்களுக்கு பக்கத்தில் இருக்க மாட்டோம். அதற்கு நான் ' அவுஸ்திரெலியா துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு குடுத்தால் என்ன பயங்கரவாதமா? ' என்று கேட்டு விட்டு பேருந்தில் ஏறினேன் பேருந்துப் பயண முடிவில் பேருந்தில் இருந்து இறங்கி மைதானத்தினை நோக்கி சென்றேன். பல தமிழர்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியுடன் சிறிலங்காவுக்கு ஆதரவான உடையுடன் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் என்னை ஒரு வித்தியசமாகப் பார்த்தார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் அவுஸ்திரெலியாவிற்கே ஆதரவு என்று சொன்ன நியூகாசில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சிறிலங்கா தேசியக் கொடியுடன் அங்கு வந்தார். என்னைக் கண்டதும் தான் விளையாட்டினை இரசிப்பவன். அரசியலை இங்கு இழுக்கவேண்டாம் என்றார். முன்பதிவு செய்யப்பட்ட எனது இருக்கைக்கு சென்ற போது அங்கே அவுஸ்திரெலியாவுக்கு அதரவு தெரிவித்துக் கொண்டு தமிழர்கள் இருந்தார்கள்.

போட்டி தொடங்கியதும் நாங்கள் அவுஸ்திரெலியா துடுப்பாட்டக் காரர்கள் பந்தினை நன்றாக அடிக்கும் போது எழுந்து நின்று கொடியினை ஆட்டி அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.அப்பொழுது மைதானத்தில் உள்ள திரையில் நாங்கள் அடிக்கடி வந்தோம். நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியில் எங்களைக் காட்டினார்கள்.
ஆனால் எங்களுக்கு பின்னால் பல சிங்களவர்களும் இருந்தார்கள். அவர்கள் இசைக் கருவியினை மீட்டி இசைக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களில் சிலர் இசைக்கருவிகளை கொண்டு வரும் போது மைதானத்தின் வாசலில் இருந்த காவலர்கள் அந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. கேட்டதற்கு முன்பதிவு செய்திருக்கவேண்டும் என்றார்கள். பல முயற்சிகள் செய்தும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. முன்பு சிட்னியிலும் கன்பராவிலும் நடைபெற்ற போட்டியில் முன்பதிவு செய்யாமலே இசைக்கருவிகளை மைதானத்துக்கு கொண்டுவர தமிழர்களுக்கு அனுமதி தந்திருந்தார்கள். சிங்களவர்களின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்கத் தொடங்க திரையில் அவுஸ்திரெலியாக் கொடியும் சிங்களக் கொடியும் அருகருகே இருப்பது போலத் தெரிந்ததினால் நாங்கள் ஆட்கள் இல்லாத இடத்துக்கு சென்று அமர்ந்து அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தெரிவித்தோம். சிங்கள தேசத்துக்கு அதிகளவான ஆதரவாளார்கள் ஆடிக் கொண்டிருந்ததினாலும், சிங்கள தேசத்து துடுப்பாட்ட அணி அன்று நன்றாக விளையாடியதினாலும் சிங்களவர்களை அதிக நேரம் பிறகு திரையில் காண்பித்தார்கள்.

தமிழர்களின் குரல் அமைப்பு கிட்டத்தட்ட 120 பேருக்கு நுளைவு சீட்டினை விற்றிருந்தது. ஆனால் அங்கே கிட்டத்தட்ட 50, 60 தமிழர்கள் தான் எங்களுடன் இருந்து அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தந்தார்கள். சில தமிழர்கள் தனியாக இருந்து துடுப்பாட்டம் பார்த்தார்கள். சிலர் குடிப்பதிலேயே நேரத்தினைப் போக்கினார்கள். சிலர் தமிழர்களின் குரல் மூலம் நுளைவுச்சீட்டினை வாங்கி சிங்களத்து ஆடை அணிந்து வந்து சிங்களவனோடு ஆடிக் கொண்டிருந்தார்கள். இதைவிட நூற்றுக்கணக்கான தமிழர்கள் தாங்களாகவே நுளைவு சீட்டினை வாங்கிக் கொண்டு வந்து சிங்கள தேசத்துக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியான தமிழர்களில் ஒருவர் எங்களைப் பார்த்து நடுவிரல் காட்டினார். சிங்கள ஆதரவு தெரிவித்த இன்னுமொரு பெண் தமிழர் 'விளையாட்டில் அரசியல் பார்க்கக்கூடாது. சிறிலங்கா பிடிக்காவிட்டால் வேறு எங்கேயும் போய் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். இங்கேயேன் வந்தீர்கள்' என்றார். எங்களுடன் இருந்த தமிழர் ஒருவர் அந்தப் பெண்ணைப் பார்த்து 'உனது அப்பாவின் பெயர் பண்டாராவா?' என்று கேட்டார். மாவீரர் குடும்பத்து இளைஞன் ஒருவரும் சிங்கள தேசத்து ஆதரவு உடையுடன் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார். சிறிலங்காவுக்கு விடுமுறை போகப் போகிறோம் என்று பேருந்து தரிப்பிடத்தில் சொன்ன மாணவர்களும் சிங்கள தேசத்து ஆதரவு உடையுடன் நின்றார்கள். அங்கே எங்களைக் கண்டதும் ஒடப்பார்த்தார்கள். எங்களுடன் இருந்த தமிழர் ஓருவர் அவர்களுக்கு அவுஸ்திரெலியா ஆதரவு உடையினை அணிவித்தார். கன்பராவில் இருந்து 300 கிலோ மீற்றர் பயணம் செய்து வந்த ஒரு தமிழ் குடும்பம் எங்களுடன் இருந்து அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

சிங்கள தேசத்து பொருட்களை விற்பனை செய்யும் தமிழ்க் கடைக்காரர் எங்களைப் பார்த்து' இவைக்கு வெள்ளைக்காரர்கள் என்று நினைப்பு. இவை என்ன கொடி பிடிச்சாலும் இவை கறுப்பர்கள் தான் . மூளை சலைவை செய்யப்பட்ட கூட்டங்கள் இவை' என்று இன்னுமொரு தமிழருக்கு சொன்னார். சிங்கள அணி அவுஸ்திரெலியாவுக்கு துடுப்பாட்டம் வரும் போது அவர் தனது கடையில் சிங்கள அணிக்கு ஆதரவான ஆடைகளை விற்பவர். அவுஸ்திரெலியாவிற்கு ஆதரவு தரும் எங்களுக்கு சில வெள்ளைக்காரர்கள் ஆதரவு தந்தார்கள்.
போட்டியின் இடையே சிங்கள தேசத்துக்கு ஆதரவு தரும் கூட்டத்தில் இருந்து தமிழீழ தேசியக் கொடியுடன் ஒரு தமிழர் ஒருவர் தோன்றினார். இது பற்றி ஊடகங்களில் படித்திருப்பீர்கள்.

மைதானத்திலும், வீடு செல்லும் போது புகையிரத வண்டியிலும் பல வெள்ளைக்காரர்கள் ஏன் நீங்கள் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தந்தீர்கள் என்று கேட்க சிங்கள தேசத்தின் தமிழர்கள் மீதான இன அழிப்பினை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு முன்பாக ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகக் காட்டியும், துடுப்பாட்டத்தின் போது சிங்களத்துக்கு கொடி பிடித்த தமிழர்கள் என்னிடம் அவுஸ்திரெலியாவுக்கு கொடி பிடித்து என்னத்தினை சாதித்தீர்கள், அவுஸ்திரெலியா படுதோல்வி அடைந்திருக்கிறது என்றார்கள். அவுஸ்திரெலியா வென்றாலும் தோற்றாலும் நான் தமிழ் அவுஸ்திரெலியன். நான் சிறிலங்கன் அல்ல. கொடி பிடிக்கப் போய் சில வெள்ளைக்காரர்களுக்கு எங்களது அவலங்களை சொல்ல முடிந்ததே என்ற திருப்தி எனக்கு கிடைத்தது. இந்த திருப்தியை எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது.

மைதானத்தில் சிட்னி துடுப்பாட்ட உறுப்பினர்கள் அமர்ந்து துடுப்பாட்டத்தினைப் பார்வையிட தனியிடம் இருக்கின்றது. விண்ணப்பித்து 15, 20 வருடங்களின் பின்பு தான் உறுப்பினராக முடியும். அந்த உறுப்பினர்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு நாங்கள் செல்ல முடியாது. ஆனால் யாராவது தெரிந்த உறுப்பினர் இருந்தால் அவருடன் நாங்கள் செல்லலாம். சிறிலங்கா தூதுவராலயத்தினை சேர்ந்தவர்களுக்கு விசேட அனுமதி அங்கே இருக்கிறது. அங்கே போர்க்குற்றவாளியும் முன்னாள் கடற்படை தளபதியுமான அவுஸ்திரெலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் திசாரா சமரசிங்க உட்பட சில தூதுவராலயத்தினை சேர்ந்தவர்களும் இருந்தினை வீடு வந்து சேர்ந்தபின்பு தான் அறிந்தோம். தமிழ்க் கவுன்சிலர் ஒருவரும் அங்கே இருந்து சிங்களத்தில் தூதுவராலய அதிகாரி ஒருவருடன் சிங்களத்தில் கதைத்துக் கொண்டு துடுப்பாட்டத்தினை இரசித்துக் கொண்டிருந்தாகவும் அறிந்தோம். யார் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுத்தாலும் நான் தொடர்ந்து அவுஸ்திரெலியாவிற்கே ஆதரவு கொடுப்பேன். எனென்றால் நான் சிறிலங்கனல்ல. நான் தமிழ் அவுஸ்திரெலியன்.