Wednesday, May 26, 2010

ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, சாகும் வரை இருக்கும் இந்த வலி

தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்துறை என்று எல்லாவற்றிலும் தமிழ் இருந்தது.

கால்படை, கடற்படை, விமானப் படையுடன் தமிழர்கள் ஆண்ட அந்த மண்ணை நயவஞ்சக சகுனி காந்தி தேசம், பாகிஸ்தான், சீனா, மேற்கு நாடுகள் துணையுடன் சிங்களதேசம் ஈவு இரக்கமின்றி அழித்துக் கொண்டிருந்தது. மரங்களைத் தறித்தால் குற்றம் என்று சொல்லும் உலக நாடுகள் இங்கே குழந்தைகள், பெண்கள், வயோதிபர் உட்பட அனைவரும் கொன்று அழிக்கப்படும் போது வேடிக்கை பார்த்தன. வயது வேறுபாடின்றி சித்திரவதை செய்யப்பட்டு அங்கு தமிழர்கள் இறக்க, பெண்கள் சிங்களப் படைகளுக்கு இரையாகிப் போக அதைத் தடுக்க புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழக தமிழ் உணர்வாளர்களும் நியூயோக், சிட்னி, இலண்டன், பாரிஸ், சூரிச், தமிழகம் போன்ற இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என நடாத்தியும் உலகம் கண்டு கொள்ளவில்லை. முத்துக்குமார் தொடங்கி முருகதாஸ் வரை தங்களது உடலுக்கு தீ மூட்டி அழித்துக்காட்டியும் உலகம் கண்டு கொள்ளவில்லை. சரணடையுங்கள் என்று தமிழர் தரப்பை மட்டும் உலகம் கேட்டது. கபட நாடகதாரி கருணாநிதியோ, சோனியாவின் மடிப்பிச்சைக்காக 2 மணித்தியாலம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று தமிழகத்து மக்களின் எழுச்சியை திசை திருப்ப முயன்றார். கோமாளிகள் என்று சரத் பொன்சேகாவினால் பட்டம் பெற்றவர்களும் தேர்தல் வர ஈழத்துப்பிரச்சனையை தங்களின் அரசியல் இலாபத்துக்குப் பயன் படுத்தினார்கள். இந்நிலையில் சென்ற வருடம் மே மாதம் 18ம் திகதி சிங்களம் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சரணடைந்த தமிழர்கள் சிறைகளில் சித்திரவதைகள் அனுபவித்து இறந்து கொண்டிருக்க , தமிழர்களுக்கு பொலிப் புத்திமதி சொன்ன நாடுகள் இப்பொழுது இறந்த வீட்டில் என்ன பிடுங்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன.



கடந்த 30 வருடங்களாக சிங்களம் தமிழனை அழிக்க உயிர்தப்பி ஓடி ஒளிந்து வெளினாடுகளுக்கு தப்பிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இந்த 30 வருட சிங்களப் பயங்கரவாத அரசின் நடவடிக்கைகளினால் பல தமிழர்களின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், உறவுகள் எல்லாம் வெவ்வேறு நாடுகளிலும் சிறைகளிலும் பிரிந்து சிதறிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலரது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, எங்கு இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி, தொழில், காதல்,கல்யாணம்,பழக்க வழக்கம், கலாச்சாரம் எல்லாவற்றையும் இந்த 30 வருட சிங்களப் பயங்கரவாதம் தான் தீர்மானித்தது. ஆனாலும் எங்களுக்கு ஒரு நிலம் இருக்கிறது என்று நம்பிக்கையோடு வாழ்ந்தோம். ஆனால் சென்ற வருடம் மே மாதம் 18ம் திகதியுடன் சிறுசு சிறுசாகக் கட்டிய அந்தக் கோட்டை, கொத்தணிக்குண்டுகளினாலும், நச்சு வாயுக்களிலும் அழிக்கப்பட்டு விட்டது.

சென்ற வருடம் மே 18ம் திகதிக்குப் பிறகு புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களில் பலர் மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். அந்த சம்பவங்களை மறக்க முயற்சித்தாலும் முடியாமல் தவிக்கிறார்கள். திரைப்படம்,சர்வதேச துடுப்பாட்டம், சுற்றுலா என்று வேறு விடயங்களில் ஆர்வம் காட்டி இந்த மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சித்தாலும் இடை இடையே ஊடகங்களில் வரும் செய்திகள், தெரிந்தவர்களுடன் கதைக்கும் போதும் மீண்டும் தவிக்கிறார்கள். நித்திரை கொள்ளும் போதும் இடையிடையே அந்த சம்பவங்கள் நினைவில் வந்து தூக்கத்தைக் கெடுக்கின்றன. இந்தத்தலைமுறையில் உள்ள ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, அவர்கள் சாகும் வரை இந்த வலி வந்து கொண்டே போகும்.

சென்ற கிழமை 18ம் திகதி சிட்னி மாட்டின் பிளேசில் நடைபெற்ற முதலாவது ஆண்டு கோர இன அழிப்பு கவனயீர்ப்பில் கலந்து கொண்டேன். பயங்கரக் குளிர், தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற அந்நிகழ்வில் கறுப்பு உடை அணிந்து பெரும்பாலும் எல்லாக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட தமிழர்கள் அங்கும் வந்திருந்தார்கள். பச்சைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலர் அங்கு உரையாற்றினார்கள். கொட்டும் மழையில் குடை பிடித்துக் கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை அங்கு நின்ற மக்கள் தமிழ் மொழிக்காக இறந்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சலி செய்தார்கள். இவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம், தாயகத்துக்கு உதவுவதன் மூலம் இந்த மன அழுத்தத்தை ஒரளவு குறைக்கலாம்.

5 comments:

  1. //இந்தத்தலைமுறையில் உள்ள ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, அவர்கள் சாகும் வரை இந்த வலி வந்து கொண்டே போகும்.//

    உண்மைதான் . எதுவும் செய்ய முடியாத கையாலாகத நிலையில் வாழ்வதென்பது இரட்டிப்பு வலியாக சாகும் வரை இருந்துகொண்டே இருக்கும்.

    ReplyDelete
  2. பரமா said...
    உண்மைதான் . எதுவும் செய்ய முடியாத கையாலாகத நிலையில் வாழ்வதென்பது இரட்டிப்பு வலியாக சாகும் வரை இருந்துகொண்டே இருக்கும்.

    ஆம், இனி ஒன்றும் செய்ய முடியாத நிலை, இருந்த நம்பிக்கையும் மே 18, 2009 உடன் போய் விட்டது

    ReplyDelete
  3. படித்தவுடன் மனம் நிறைய கணக்கிறது ...

    ReplyDelete
  4. உண்மையே

    www.tamilthottam.in

    ReplyDelete
  5. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete