அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர்.
பகல் பதினொரு மணியளவில் மணமகன் குதிரை வண்டியில் ஏரிக்கரை ஒரத்தில் இருக்கும் பூங்காவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மணத்தோழனுடன் வந்து இறங்கினார். மூன்று தலைமுறைக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் திருமண நிகழ்வுக்கு குதிரை வண்டியில் தங்களது பரம்பரையில் மணமகன்கள் வருவது வழக்கம், அதே போல மணமகன் வர வேண்டும் என மணமகனின் பாட்டியார் விரும்பியதினால் மணமகன் குதிரை வண்டியில் வந்தார். நாதசுரம், மேளவாத்தியங்கள் வாசிக்கப்பட மணமகன் மேடைக்கு வந்து அமர்ந்தார். மேடைக்கு அருகில் இருக்கும் ஒலிவாங்கியில் திருமண நிகழ்வு பற்றி, அதை முன்னெடுத்துச் சென்றவர் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தார். வழமையாகத் திருமண நிகழ்வுகளில் காணப்படும் தேவையற்ற சடங்குகள் இத்திருமண நிகழ்வில் இல்லை. ஆனால் சம்பிரதாயங்கள் பேணப்படும் என்று சொன்னார். மேடையில் ஐயர் ஒருவரையும் காணவில்லை. இதனால் வழமையான திருமண நிகழ்வுகளில் ஐயர்மார்களினால் சொல்லப்படும் பொருள் விளங்காத வட மொழி இங்கு உச்சரிக்கப்படவில்லை.
மணமகனின் தகப்பனார் தேங்காய் உடை த்ததும், மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை கட்டும் நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக ஈழத்தில் பிறந்த பலர் சிட்னியில் தங்களது திருமணத்தின் போது வட இந்திய உடைகளை அணிவது வழக்கம். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன் வேட்டி அணிந்திருந்தார். சால்வையினைக் கொண்டு மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை இங்கு அணிவிக்கப்பட்டது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் வரும் உதயன் பத்திரிகையில் மாப்பிள்ளைகளின் சீதனப் பட்டியலின் விபரங்கள் வெளியாகி இருந்தன. பெரும்பாலான ஆண்கள் தன்னைப் பற்றி நினைப்பதில்லை. ஆனால் தனக்கு வருபவர் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும். அத்துடன் முக்கியமாக கொழுத்த சீதனம் தரப்பட வேண்டும். சிங்கள அரசு, தமிழர் தயாகத்தினை முற்று முழுதாக கைப்பற்றிய பின்பு தாயக விடுதலைக்காக அர்ப்பணித்த பெண்கள் பலரினை சமுகம் ஒதுக்கி வைத்திருப்பதாக ஊடகங்களில் சில செய்திகள் வந்தன. சிலரை அவர்களின் குடும்பங்களே கண்டு கொள்வதில்லை எனவும் செய்திகள் வந்தன. ஆனால் வன்னியில் இருந்து பெண் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து சிட்னிக்கு அழைத்து, மணமகளாகக் கைபிடிக்க முனைந்தார் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன். மணமகனுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதும், வெவ்வேறு வயதுடைய 28 தோழிகளுடன் மணமகள் மேடைக்கு வந்தார்.
மே 19 2009க்கு முன்பு விடுதலைப்புலிகளை உயர்வாகப் பேசியவர்களில் சிலர் இப்பொழுது விடுதலைப்புலிகளைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். அவர்களின் தியாகங்களை கொச்சைப் படுத்துகிறார்கள். முன்பு ஊடகங்களில், மேடைகளில் , பொதுவிடங்களில் புலிகளை உயர்வாகச் சொன்ன இவர்கள் மே 2009க்குப் பிறகு வந்த மாவீரர் தினங்களில் கலந்து கொள்வதில்லை. மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பார்ப்பதில்லை. மணமகள் மேடைக்கு வந்ததும் மாவீரர்களை நினைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.
திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர், தாலி பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தார். அன்பின் சின்னமாக, அடையாளமாக அணிவிக்கப்படுவது தாலி. இது வேலி என்ற கருத்து தேவையற்றது. வேலி, எம் மனதில் போடவேண்டியது, கழுத்தில் அணியப்படுவதல்ல என்று அவர் கூறியதுடன் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தோர் தாலியை வாழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. அதே வேளை ஓதுவார் ஒருவரால் பஞ்ச புராணம் ஓதப்பட்டது. தொடர்ந்து மணமகன் அளிப்பும் மணமகள் அளிப்பும் இடம்பெற்றன. திருமணம் பற்றி தேசியத்தலைவர் சொன்ன "ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புகளைப் பகிர்ந்து, சமுகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு வாழ வேண்டும்" என்ற கூற்றினை திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர் சொன்னார். முள்ளிவாய்க்கால் அவலம் வரை தாயகத்தில் அங்குள்ள மக்களுக்கு உதவிய தமிழர் ஒருவர் தேங்காய் உடைக்க, மறைந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் ஆசீர்வதிக்கப்பட்ட தாலித்தட்டை ஏந்தி நிற்க, அவர் முன்னிலையில், தாயகத்துக்கு அதிகளவு உதவி செய்யும் தம்பதியினர் தாலியினை எடுத்து மணமகனுக்கு வழங்க, வீரச்சாவடைந்த மாவீரர்களையும், அரச படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூரப்பட்டவேளையில் மணமகனால் மணமகளுக்கு தாலி கட்டப்பட்டது.
திருமண நிகழ்வில் "பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே " ,"தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என் தேசமெங்கும் குண்டு வந்து வீழும் கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்" போன்ற தாயக விடுதலை கீதங்களை அழகாக நாதசுர இசையில் காதுக்கு இனிமையூட்டினார் நாதசுரக் கலைஞர். மக்கள் பெற வேண்டிய பேறுகள் பதினாறு. காளமேகப்புலவர் இப்பதினாறு பேற்றையும் இறைவனிடம் வேண்டிப்பாடிய பாடலை கூறி அழகாக அந்த பதினாறு பேறுகளும் எவை என விளக்கம் தந்தார், திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர். அவையாவன புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கள், துணிவு, செல்வம், உணவுத்தானியம், நல்லூழ், இன்பம், அறிவு, அழகு, பெருமை, அறம், நோயின்மை, நீண்ட ஆயுள்.
மணமகன் மணமகளுக்கு குங்குமப் பொட்டிட, மணமக்கள் மாலை மாற்ற, பெற்றோர், பெரியோர், வந்திருப்போர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்த சுவையான மதிய போசனத்துடன் திருமண நிகழ்வு ஒன்று முப்பது மணியளவில் முடிவுற்றது. வன்னியில் எத்தனையோ பெண்கள் திருமணவயது வந்தும் மாப்பிள்ளைகள் கிடைக்காமல் வாழ்கிறார்கள். இந்த மணமகன் முன்னெடுத்துச் செய்தது போல, புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் பல இளைஞர்கள், மணம் செய்ய எண்ணும் போது, வன்னிவாழ் பெண்களை வாழ்க்கைத் துணையாக்க முன்வருவார்களா?.
No comments:
Post a Comment