Tuesday, January 27, 2009

தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு

தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதி வவுனியாவுக்கு வந்துள்ள தமிழர்களை சரமாரியாக கொன்று குவித்து வருகிறதாம் இலங்கை ராணுவம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை இதுபோல கொன்று பிணங்களை எரித்தும், புதைத்தும் வெறியாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான தமிழ்ப் பெண்கள் ராணுவ முகாம்களில் வைத்து கற்பழிக்கப்பட்ட கொடுமையும் தங்கு தடையின்றி நடந்து வருகிறதாம்.

விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில், தற்போது அப்பாவித் தமிழர்களை தாறுமாறாக வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது இலங்கை படைகள்.

பாதுகாப்பான பிரதேசம், விடுதலைப் புலிகள் பகுதியில் உள்ள தமிழர்கள் இங்கு வர வேண்டும் என அரசு விடுத்த அழைப்பை ஏற்று அப்பாவித் தமிழர்கள் பெரும் திரளாக அரசுப் பகுதிகளுக்கு வந்தது இப்போது அவர்களுக்கு பெரும் எமனாக மாறியுள்ளது.

தந்திரமாக அவர்களை வரவழைத்து விட்டு தாறுமாறாக கொன்று குவித்து வெறியாட்டம் போடத் தொடங்கியிருக்கிறது இலங்கை ராணுவம்.




வன்னி பகுதியில் 800 அப்பாவித் தமிழர்களை ராணுவம் பீரங்கிகளால் சுட்டு மகா கொடூரமாகக் கொன்று குவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், ஐ.நா. வரை எதிரொலித்துள்ளது.

இந்த நிலையில் வவுனியாவில் தஞ்சமடைந்த அப்பாவித் தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் (இவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்) கொன்று குவிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தமிழ்ப் பெண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று ராணுவ முகாம்களில் வைத்து கற்பழித்த கொடுமையும் அங்கு நடந்து வருகிறதாம்.

இதை விடக் கொடுமை, இவ்வாறு கற்பழிக்கப்பட்ட பெண்களை மிகக் கொடூரமாகக் கொன்று அவர்களது சடலங்களை மயானத்தில் புதைத்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுராதபுரம், பொலநறுவ ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்கள், காட்டுப் பகுதிகள், வவுனியாவில் உள்ள ஆளரவற்ற பகுதிகளில் தமிழர்களின் பிணங்கள்தான் பெருமளவில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருவதாக சிங்களர்களே கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் 25 தமிழ் இளைஞர்களும், 27 பெண்களும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர் என அனுராதபுரம் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த 1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை ராணுவம் கைப்பற்றியபோது இப்படித்தான் தமிழர்களை வேட்டையாடியது ராணுவம். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், பெண்கள், இலங்கைப் படையினரால் கொன்று குவிக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டனர். அவர்கள் அத்தனை பேரையும் செம்மணி என்ற இடத்தில் புதைத்தது இலங்கை படை.

அப்போது யாழ்ப்பாண மாவட்ட ராணுவ அதிகாரியாக இருந்தவர் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் செம்மணியைப் போலவே இன்னொரு வெறியாட்டத்தை ராணுவம் நடத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.



இந்த படுகொலைச் சம்பவங்கள், கற்பழிப்புகள் குறித்து இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியை, பல்வேறு தமிழர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, 800க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழர் பகுதிகளில் கதவடைப்புப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை இந்த கதவடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Thatstamil

No comments:

Post a Comment