Monday, March 16, 2009

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு வன்னியில் இருந்து ஒரு கண்ணீர் கடிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். ஒரு ஓரமாக அமர்ந்தது அலப்பறை டீம். மிக முக்கியமான கூட்டம் என்றழைத்த சித்தனைப் பார்த்து, அப்படி என்னப்பா முக்கியமான சேதி? என்று வம்பிழுத்தார் சுவருமுட்டி.

"அது ஒண்ணுமில்லப்பா. தேர்தல் வந்துடுச்சுல்ல. தமிழ்நாடு முழுக்க இலங்கைத் தமிழர்கள் ஆதரவு பத்திக்கிட்டிருக்குல்ல. ஈழத்தமிழ் மக்கள் தினம்தோறும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக்கிட்டிருக்கிறதுக்கு காரணமே காங்கிரசின் மைய அரசுதாங்கிற கோபம் இருக்குல்ல. அத மனசுல வச்சுதான் நாங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டப்போறோம்னு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு அறிவிச்சிருக்காரு. இப்படியாவது தப்பிடலாங்கிற நப்பாசை. அது தமிழ்நாடு மக்கள்கிட்ட எப்படி எடுபடுதோ தெரியல. ஆனா தங்கபாலுவின் அந்த நிவாரணவசூல் அறிவிப்பு ஈழத்தமிழர் மத்தியில பெரிய ஆதங்கத்தை எழுப்பியிருக்கு. அந்த மக்கள் சார்பான ஒரு கொந்தளிப்பு கடிதம் ஒன்று வன்னியில் இருந்து நமக்கு வந்திருக்கு. வெற்றிகொண்டான் என்கிற பெயரில் எழுதியிருக்காங்க. அத அப்படியே வாசிக்கிறேன் கேளுங்க..." என்று கூறிய சித்தன் வாசிக்கத்தொடங்கினார்.

மதிப்பிற்குரிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு அவர்களே!


வணக்கம்.


உயிரைக் கையில் பிடித்தபடி நாளின் ஏறக்குறைய முழுப்பகுதியையும் பதுங்கு குழிகளுக்குள் உயிர் வற்றிப்போக ஒடுங்கிக்கிடந்து குண்டுச்சத்தமற்ற நாளையின் வரவுக்காக ஏங்கிக் காத்துக்கிடக்கும் உங்கள் இனத்தவன் எழுதுகிறேன். கடந்த ஆண்டின் இறுதியில் தீவிரமடைந்து இந்த ஆண்டு மிகமிக மோசமடைந்து விட்ட 21ம் நூற்றாண்டின் மிக மோசமான மனித அவலம் என்று வர்ணிக்கப்படும் வன்னி அவலத்தின் நேரடிச் சாட்சியம் எழுதுகிறேன்.


என் இனத்தவரே!


எமக்காக நிதி சேகரிக்கிறீர்களாம். சோனியா அம்மையாரின் உத்தரவாம். பதுங்கு குழிக்குள் வாழ்க்கை என்றாலும் அறிந்தோம். அதிர்ந்தோம். சிங்களவனின் கொடிய குண்டைவிட அபாயம் நிறைந்த செய்தி.

இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள். இப்போது எங்கிருக்கிறீர்கள். எம்மீது ஏன் இந்த திடீர் அக்கறை?. எங்களை அவமானப்படுத்தாதீர்கள். தயவு செய்து எங்களை அவமானப்படுத்தாதீர்கள்.

மனசாட்சி ஒன்றிருந்தால் உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். இன்றைய எமது நிலைக்கு யார் காரணம்? உண்மையில் நீங்கள் தமிழனாக இருந்தால், அதையும் தாண்டி இந்தியனாக இருந்தால், அதையும் தாண்டி மனிதனாக இருந்தால், தமிழக மக்களின் இன்றைய அவல நிலைக்கு இந்தியா, குறிப்பாக காங்கிரஸ் கட்சியே முக்கியமான காரணம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். வாய்கூறாவிட்டாலும் மனம் கூறும்.

சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு முண்டுகொடுத்தீர்கள். இன அழிப்பு போருக்கான ஆயுத தளவாடங்களைக் கொடுத்தீர்கள். யுத்த கப்பல்கள் கொடுத்தீர்கள். பயிற்சிகள் கொடுத்தீர்கள். போர் நிபுணத்துவ உதவிகளை செய்தீர்கள். எங்களது விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கான ஆசிகளையும் ஆலோசனைகளையும் அனைத்து விதமான உதவிகளையும் பொளத்த சிங்களப் பேரினவாதப் பேய்களுக்கு செய்தீர்கள். பிளவுகளை ஏற்படுத்தினீர்கள். எம்மைப் பலவீனப்படுத்தினீர்கள். இந்திய நலன் என்ற சிறிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சின்னஞ்சிறிய இனமான தமிழீழ தேசிய இனத்தை சிதைத்தீர்கள். கூறுபோட்டீர்கள். மனிதம் தவறிவிட்டீர்கள்.

உலகம் போற்றும் மகாத்மா காந்தியையும், அகிம்சை தத்துவத்தையும் முன்னால் காட்சிக்கு வைத்து விட்டு நீங்கள் எம்மண்ணில் செய்த அக்கிரமங்கள், கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று சிங்கள இனவெறி அரசுக்கு கூட்டாகத் தொடர்கிறீர்கள். அதுசரி. உண்மையில் எங்கள் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதா?

அரை உயிர் பறிக்கப்பட்டு, கூன் குருடு நொண்டிகளாக்கி விட்டு பின் மருந்து தருகிறீர்கள். உடை தருகிறீர்கள். இப்படி ஒரு கொடுமை நடவாமல் தடுப்பதை விட்டு கொடுமையின் விளைவுக்கு ஒத்தடம் போடுகின்றீர்கள். இது நியாயமா?...."


இப்போதாவது காங்கிரஸ் நல்லதை செய்ய முன்வந்திருக்கின்றதே. அதைக்கூட குறைசொன்னால் எப்படீ..?- கோபால்.


"அடடே...அப்படியா. அதற்கும் ஒரு விளக்கம் சூடாகவே தொடர்கிறது கேளுங்கள்..."- சித்தன் தொடர்ந்தார்.


"....உலகை எட்ட வைத்து விட்டு, போரை நடத்துவது நீங்களே என்று சிங்களத் தரப்பே தற்போது கூற ஆரம்பித்துவிட்ட நிலையில், போரை நிறுத்துவதற்கு மட்டும் அது உள்நாட்டுப் பிரச்னை என நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை. இந்தப் பிரச்னையின் ஆணிவேர்வரை உங்கள் கையிருக்கிறதே. மறைக்க முனையாதீர்கள். தற்போது தேர்தல் காலம். தமிழகத்தில் வினைப்பலன் கிடைத்துவிடுமா என்று அஞ்சுகிறீர்கள். அரிதாரம் பூசிக்கொண்டு வேறொரு பாத்திரத்தில் நடிக்க முற்படுகிறீர்கள்.


ஈழத்தமிழருக்காக நிதி சேகரிப்பு!.


எது எங்கள் மரணச் சடங்கிற்கா அரிசி சேகரிக்கிறீர்கள். வாய்க்கரிசிக்கா?

ஈழத்தமிழர்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அது உங்களுக்கும் தெரியும். பின் யாரை ஏமாற்ற இந்த வேடம்?

யாரை ஏமாற்றுகிறீர்கள். எங்கள் தமிழ் உறவுகளையா? ஏமாற மாட்டார்கள்.

புளித்துப்போன அரசியல் சவடால்கள், பொய்யுரைகள் கேட்டு ஏமாந்த காலம் போயிற்று. இன்று தமிழகத்தில் புதிய இரத்தம். தமிழ் இரத்தம். மானம் கொப்பளித்துப் பாயும் இளரத்தம் ஓடுகிறது. விசயங்களுக்கு இங்கே இடமில்லை.

உண்மைகளைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். கட்சிகளுக்காகவும், கட்சித் தலைவர்களுக்காகவும் உயிரை மாய்த்த காலம் போய் இன்று இனத்துக்காக களமிறங்கியிருக்கும் சிந்தித்துச் செயல்படும் இளந்தமிழர்கள் மத்தியில் உங்கள் நரித்தனங்கள் எடுபடாது. உங்களது காலம் பாழாய்ப்போன பழைய காலம்.

இன்று புதிய மனிதர்கள். புதிய காற்று. அறிவுடை மக்கள். அழகான தமிழகம்.


தங்கபாலு அவர்களே!


கொஞ்சம் தமிழராய் சிந்தித்துப் பாருங்கள். கொஞ்சநேரம் போதும். கண்களை சிறிது மூடி தமிழனாய் சிந்தியுங்கள். புதிய மனிதனாய் பிறப்பீர்கள். எங்கள் அழிவில், தமிழீழ மண்ணில் கொட்டிக்கிடக்கும் எங்கள் குருதியில் துண்டங்களாய் வன்னி எங்கும் சிதறிக்கிடக்கும் எங்கள் குழந்தைகளின் எங்கள் பெண்களின் எங்கள் உறவுகளின் சதைத் துண்டங்களில் உங்களின் கை இருக்கிறது அன்பரே!


தற்போது புதிதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. போர் முடிவடைந்ததும் இலங்கை அரசு இனப்பிரச்னைக்கு தீர்வை முன்வைக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்திருக்கிறாராம்.


போரை நிறுத்துவதில் தலையிட முடியாது. அது உள்நாட்டுப் பிரச்னை என்று கூறி நழுவும் இந்தியா, போர் முடிந்ததும் தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வது என்பது பொருத்தப்பாடாய் இல்லை. ஆக..இந்தப் போரை இறுதிவரை தொடர்வதில் உறுதியாக இருக்கிறது இந்தியா. அப்படியானால் எல்லாம் முடிந்தபின் இந்த அரிசி பருப்பு, மருந்து, பணம் என்பனவற்றை சேகரிக்கலாமே? அதுவரை உங்கள் தேர்தல் பொறுத்திருக்காது. அதனால் இப்பொழுதே தொடங்குங்கள். ஆயிரமாயிரமாய் ஓட ஆரம்பித்து நூறாய் சுருங்கி இன்று பத்தாய் துவண்டு கிடக்கிறோம். ஆனால் மண்டியிட மாட்டோம் அன்பரே.


வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு கட்சி அரசியல் நடத்தும் உங்களால் இரத்தச் சகதியில் பிணங்களோடு இன்னும் உயிருள்ள பிணங்களாய்க் கிடக்ம் எங்கள் வேதனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. எங்கள் துயரங்களை அறிந்து கொள்ள முடியாது. எங்கள் பிரிவுகளை, எங்கள் அழிவுகளை, எங்கள் அவலங்களை எழுத்தில் தருவதும் முடியாது. புகைப்படங்களைக் காட்டி விளக்குவதற்கும் முடியாது. இதயங்களின் தவிப்பு, ஏக்கம், வெம்மை எப்படிச் சொல்லி புரிய வைப்போம்.


ஒன்றை மாத்திரம் உங்களிடம் வினயமாக முன்வைக்கிறேன். எங்களை காட்சிப் பொருளாக்கி அரசியல் நடத்தாதீர்கள். எங்களை அவமானப்-படுத்தாதீர்கள். எங்கள் தமிழக உறவுகளை ஏமாற்றாதீர்கள்.


இந்த திறந்த மடல் உங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையில்...


வன்னியில்
ஆறாவது இடம்பெயர்வுக்குப் பின்
புதுக்குடியிருப்பு வடக்கில், ஒரு பதுங்கு குழியில் இருந்தபடி...


வெற்றிகொண்டான்,
15/03/2009


"இது சாதாரண கடிதம் இல்லேப்பா. ரத்தக்கண்ணீர் கலந்த கொந்தளிப்பு கடிதம்னே சொல்லணும். இதே கொந்தளிப்பு தமிழ்நாட்டு மக்கள்கிட்ட எழுந்தா காங்கிரசுக்கு கஷ்டகாலம்தான்" என்றபடியே எழுந்தார் சுவருமுட்டி சுந்தரம். கூட்டம் கலைந்தது.
-குமுதம் முச்சந்தி

3 comments:

  1. எங்களை காட்சிப் பொருளாக்கி அரசியல் நடத்தாதீர்கள். எங்களை அவமானப்-படுத்தாதீர்கள். எங்கள் தமிழக உறவுகளை ஏமாற்றாதீர்கள்.இதை
    உங்கள் குடும்பத்னரர்வது பாத்து எங்களைப்பற்ரி
    அறிந்து உங்கழுக்கு புத்தி சொல்லட்டும்.வெள்ளை வேட்டி கட்டாதீர்கள்.மனசாட்சி இருக்றதா????

    ReplyDelete
  2. //எங்களை காட்சிப் பொருளாக்கி அரசியல் நடத்தாதீர்கள். எங்களை அவமானப்-படுத்தாதீர்கள். எங்கள் தமிழக உறவுகளை ஏமாற்றாதீர்கள்.இதை
    உங்கள் குடும்பத்னரர்வது பாத்து எங்களைப்பற்ரி
    அறிந்து உங்கழுக்கு புத்தி சொல்லட்டும்.வெள்ளை வேட்டி கட்டாதீர்கள்.மனசாட்சி இருக்றதா????//
    இப்பொழுது தேர்தல் காலம், தாங்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்ததாக ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு துணைபோகும் காங்கிரசு அரசு பொய் சொல்லுகிறது. உங்களின் கீழ்த்தரமான அரசியலுக்கு எங்களை இழுக்காதீர்கள்.

    ReplyDelete
  3. நான் இந்தியாவை வெறுக்கிறேன்.

    நான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.

    நான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்

    I HATE INDIA.

    I ASHAME TO BE AN INDIAN.

    I DONT WANT TO BE AN INDIAN.

    AND I DONT WANT MY COUNTRY (TAMILNADU) TO BE A PART OF INDIA.

    ReplyDelete