Sunday, February 21, 2010
என்னைக் கவர்ந்த '1999' திரைப்படம்
தாயகத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்மா நலமா', 'ஆணிவேர்', 'குருதிச்சின்னங்கள்', இலண்டனில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நியமானால்', கனடாவில் தயாரிக்கப்பட்ட 'தமிழச்சி' ஜேர்மனியில் வாழ் ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை வாசம்' ஆகிய திரைப்படங்கள் கடந்த 7,8 வருடங்களில் சிட்னியில் திரையிடப்பட்ட எம்மவர்களின் திரைப்படங்களாகும். நான் மேலே குறிப்பிட்ட எல்லாப்படங்களையும் திரையில் பார்த்தேன். நாங்கள் ஆதரிக்காது விட்டால் யார்தான் ஆதரிப்பார்கள் என்ற நோக்கத்துக்காக எம்மவர்களின் படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பேன். பொதுவாக எம்மவர்களின் படங்கள் தரமற்றவை என்ற அபிப்பிராயம் எங்களுக்குள் இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்களினால் இப்படங்கள் உருவாகப்படுவதும் காரணமாக இருக்கலாம்.
லெனின் அவர்கள் இயக்கிய இப்படம் பற்றிய செவ்வி யாழ் இணையத்தின் முகப்பில் சில நாட்களுக்கு முன்பாக இருந்தது. ஆனால் நான் வாசித்துப் பார்க்கவில்லை. சிட்னியில் திரையிடப்படும் எம்மவர்களின் எல்லாப்படங்களையும் ஆதரிக்கவேணும் என்ற காரணத்தில் நான் இப்படங்களைப் பார்ப்பதினால், இப்படத்தையும் பார்ப்பேன் என யாழில் எழுதியிருந்தேன். அண்மையில் நோர்வேயில் திரைப்பட விழாவில் புகழ்பெற்ற தமிழக திரைப்படங்களோடு இப்படம் திரையிடப்பட்டது. அப்படங்களுடன் இப்படம் பெரிய வரவேற்பைப் பெறுமா என நான் யோசித்துப் பார்த்தேன்.
சென்ற வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில் பெர்வூட் திரையரங்கில் இப்படம் காண்பிக்கப்பட்டது. இப்படத்தை ஜெயச்சந்திரா என்ற சிட்னி வாழ் ஈழ மண்ணில் பிறந்தவர், 'சிட்னித் தமிழ் மன்றம்' என்ற தமிழகத் தமிழர்களின் அமைப்பின் உதவியுடன் சிட்னியில் வெளியிட்டார். எம்மவரின் படம் என்பதினால் எனக்குத் தெரிந்த பலருக்கு மின்னஞ்சல் மூலம் இப்படம் பற்றிய விளம்பரத்தை அனுப்பினேன். ஆனால் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை அல்லது அவர்களுக்கு இப்படத்தைப் பார்க்க நேரமிருக்கவில்லை. என்றாலும் நான் திரையரங்கில் இப்படத்தைத் திரையில் பார்க்கச் சென்றேன். எம்மவரின் படத்தை ஆதரிக்கவேணும் என்ற காரணத்திற்காகவே சென்றேன். ஆனால் இதுவும் எம்மவர்களால் இயக்கிய சாதாரண படமாகவே இருக்கும் என நினைத்து இப்படத்தைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை.
படம் ஆரம்பித்து சில நிமிடங்களின் பின்பு, இது மற்றைய ஈழத்துப்படங்கள் போல இல்லை என்பதை உணர்ந்தேன். இப்படம் முடியும்வரை விறுவிறுப்பாக எல்லோரையும் கவரும்படி இருந்தது. நான் பார்த்து வியந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதை உணர்ந்தேன். இப்படத்தின் கதையினை இங்கே நான் சொல்லவிரும்பவில்லை. இப்படத்தின் கதை தெரிந்தால் திரையரங்களில் இனிமேல் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பு குறைவாக இருக்கும்
ஒவ்வொரு நடிகர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை திறம்பட நடித்தார்கள். அன்புவாக நடித்த சுதன் மகாலிங்கத்தின் நடிப்பும், குமாராக நடித்த திலிபன் சோமசேகரத்தின் நடிப்பும், அன்புவின் அப்பாவின் நடிப்பும் பிடித்ததாக படம் முடிந்து வெளியே வரும் போது பார்வையாளர்களில் சிலர் தங்களுக்குள் கதைத்துக் கொண்டு வந்தார்கள். எனக்கும் இக்கலைஞர்களின், இப்படத்தில் வெளிப்படுத்திய இயல்பான உணர்வு நன்றாகப் பிடித்திருந்தது. இவர்களைப் போல அமைதியாக நடித்த அகிலன் பாத்திரம் ஏற்ற காண்டி கானாவின் நடிப்பும் என்னைக் கவர்ந்தன. மற்றைய நடிகர்களும் அவர்களுக்கு வழங்கிய பாத்திரங்களை சிறப்பாக நடித்தார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் சிலர், பட்டப் பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம். மரநாய், மொட்டயன், உடும்பன் என இப்படத்தில் வரும் சில பாத்திரங்களுக்கு பெயர்கள் இருந்தன. பொதுவாக புலம் பெயர்ந்த நாடுகளில் திருமணமாகாத ஆண்கள் ஒரே விட்டில் இருக்கும் போது சிலர் காலை முதல் மாலை வரை குடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பக்கத்தில் என்ன நடக்கிறது என்றது கூடத்தெரியாது. இது போன்ற நாங்கள் பார்த்துப் பழகிய பாத்திரங்கள் இப்படத்தில் வருவதினால் எல்லாப் பாத்திரங்களும் என்னைக் கவர்ந்தன
இதுவரை எந்தத்திரைப்படங்களிலும் பார்க்காத பிரமிக்கவைத்த அருள் சங்கரின் படத்தொகுப்பு. இதனை நான் இங்கு விபரிக்கவில்லை. இங்கே எழுதினால், எனது பதிவை வாசித்து விட்டு, இனிமேல் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பு குறைவாக இருக்குமோ என்ற ஐயம் தான் காரணம். திரையில் சென்று பார்க்கும் போது பார்ப்பவர்கள் நிச்சயம் அருள் சங்கரின் படத்தொகுப்பை வியந்து இரசிப்பார்கள்.
நோர்வே திரைப்பட விழாவில் காண்பிக்காத இப்படத்தின் இருபாடல்கள் சிட்னியில் காண்பித்தார்கள். அப்பாடல்கள் படம் பிடிக்கப்பட்ட இடங்கள் மிகவும் அழகானவை. அன்பு பாத்திரம் வரும் பாடலின் போது எல்லா நடிகர்களும் ஒரே நிறத்தை உடைய ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவ்வாடைகளின் நிறம் பின்புலத்தில் தெரியும் காட்சிகளுக்கு ஏற்ப ஒற்றுமையாக கவருவதாக இருந்தது. இப்படத்தின் பாடல்களை திரையில் பார்த்தவுடனே எல்லோரையும் கவருவதாக இசையமைத்த இசையமைப்பாளர் ராஜ் தில்லையம்பலத்துக்கு எனது பாராட்டுக்கள்.
இப்படத்தை இயக்கியவர்கள் தாயாகப் பற்று மிக்கவர்கள் என்பதை இப்படத்தினைப் பார்ப்பதன் மூலம் அறியலாம். படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் அறிவார்கள். 1999 ஆண்டில் கதைவருவதினால் 1999ல் நடந்த சமபவங்களும் இப்படத்தில் (வானொலியில்) வருகின்றன.
சிட்னியில் வெள்ளிக்கிழமை திரையிட்டபோது திரையரங்கிற்கு அரைவாசிப் பேர்கள் தான் வந்தார்கள். ஆனால் சனிக்கிழமை திரையரங்கு நிறைந்து காணப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேற்பட்டவர்கள் நுளைவுச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். சனிக்கிழமை திரையிட்ட போது படம் முடிந்ததும் பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டினார்கள். இது சிட்னியில் நான் இதுவரை கேள்விப்படாத விடயம். மற்றைய படங்கள் முடிந்ததும் பலர் வீடு நோக்கிச் செல்வார்கள். ஆனால் இப்படம் முடிந்ததும் பலர் அங்கு நின்று இப்படத்தை இரசித்ததை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
நான் ஆரம்பத்தில் இப்படம் நோர்வேயில் காண்பிக்கப்பட்டபோது தமிழகத்து திரைப்படங்களோடு இப்படம் பாராட்டைப் பெறுமா என்று யோசித்திருந்தேன். ஆனால் இப்படத்தைப் பார்த்தபின்பு நோர்வேயில் காண்பிக்கப்பட்ட சில பாடங்கள் இப்படம் பெற்ற பாராட்டைப் பெற்றிருக்குமா என யோசிக்கிறேன். நோர்வே விழாவில் இயக்குனர் ஜெகநாதன்(பேராண்மை,ஈ போன்ற படங்களை இயக்கியவர்) அவர்களுக்குப் பிடித்த படமாக '1999' எனத் தெரிவித்தார். பல படங்களை பார்த்தபின்பு அன்றிரவே அப்படத்தை மறந்து விடுவோம். ஆனால் இப்படம் எனக்கு 2,3 நாட்களாக அடிக்கடி எனது ஞாபகத்துக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறது.சிட்னியில் மீண்டும் '1999' திரையிடவுள்ளதாக அறிந்தேன். பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். இப்படத்தை சிட்னியில் திரையிட்ட ஜெயச்சந்திரா, சிட்னி தமிழ் மன்றம் ஆகியவற்றுக்கு மிக்க நன்றிகள். சிறந்த படத்தை தந்த லெனின் உட்பட அனைந்து கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
திரு கந்தப்பு அவர்களுக்கு
ReplyDeleteதங்களின் 1999 படத்தைப்பற்றிய கருத்தளிப்பு படித்து இரசித்தேன். ஆனாலும் செய்த கைகள் ஒன்று மாலை பெறும் தோள்கள் ஒன்று என்கிற கதையாய் 'சிட்னி தமிழ் மன்றம்' தமிழ்நாட்டுக்கு எல்லைகள் இருக்கலாம், ஆனால் தமிழர்களுக்குள் இல்லை எல்லை' என்னும் விதமாக தமிழன் ஒருவனின் சிறப்பான திரைப்பட முயற்சியினை சிட்னி மாநகரில் திரையிட்டு வாழ்த்திய முயற்சியினை சிட்னி தமிழ்ச் சங்கம் என்று மாற்றி எழுதியதால் மனம் வருத்தப்பட்டுப் போனேன். ஏனென்றால் அடியேன் சிட்னி தமிழ் மன்றத்தின் முன்னாள் செயலரும், இந்நாள் தலைவர் திரு ஜான் நிவெனின் தமிழ் மாத இதழ் தென்றலின் ஆசிரியரும் ஆக இருப்பவன். ஆகவே இந்த தவறுதனை சரி செய்து திருத்தத்துடன் மீண்டும் இணையத்தில் தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றியும் கூட.
என்றும் போல் தங்களின் தமிழார்வம் தழைத்தோங்கிட வாழ்த்தும்,
இன்னோரு தமிழன்
பாலு விஜய்.
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் திரு பாலு விஜய் அவர்களே. உங்களின் தென்றல் இதழை தொடர்ந்து படிப்பவன். உங்களின் தமிழ் உணர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபடத்தை அனுபவித்துப் பார்த்தது போல் விமர்சனமும் அப்படியே இருக்கு
ReplyDeleteஈழத்தமிழர்களின் தரமான கலை முயற்சிகள் உலக அளவில் ("1999"-Vancouver International Film Festival) அடையாளம் காணப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. மிக குறைந்த வளங்களுடனும், மிகத் திறமையாக, அர்ப்பணிப்போடு (இது தவிர வேறெப்படி சொல்வதென்று தெரியவில்லை) எங்களின் புலத்து வாழ்வின் மறுபக்கங்களை சொல்லும் முயற்சி. எங்களின் அவலங்களால் மட்டும் நாங்கள் உலகில் அறியப்படாமல், இப்படியான ஈழத்தமிழர்களின் தரமான முயற்சிகள், அறிவுத் திறன்கள் மூலமும் அறியப்பட வேண்டும் என்ற அவாவுடன், ரதி.
ReplyDeleteகானா பிரபா said...
ReplyDeleteபடத்தை அனுபவித்துப் பார்த்தது போல் விமர்சனமும் அப்படியே இருக்கு
உண்மைதான். சிட்னியில் பார்த்தவர்கள் பலருக்கு இப்படம் பிடித்திருக்கிறது.
வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
ReplyDeletehttp://tamiltop10ssss.blogspot.com/
உங்களின் கருத்துக்கு நன்றிகள் ரதி
ReplyDelete1999 திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Sn8s0mYUlIU